தம்பதி விஷம் குடித்து தற்கொலை
பொங்கலூர் அருகே கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 61). விவசாயி. இவரது மனைவி தமிழரசி (50). இவர்கள் மகன் சம்பத்குமார் (35) மற்றும் மருமகள் கலையரசி (30) ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சம்பத்குமார் திருப்பூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
தம்பதி தற்கொலை
நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார். அப்போது தந்தை வேலுச்சாமி மற்றும் தாயார் தமிழரசி ஆகியோர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை திறந்து மயங்கி கிடந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு இருவரையும் மருத்துவர் பரிசோதனை செய்தபோது வேலுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே வேலுச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தாயார் தமிழரசிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துசென்று உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி மாலை 6 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து சம்பத்குமார் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
ஒரே நேரத்தில் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொங்கலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.