பட்டா மாறுதல் வழங்க லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்
பட்டா மாறுதல் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.
அந்தியூர்
பட்டா மாறுதல் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.
கிராம நிர்வாக அலுவலர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக சதீஷ்குமாரை அணுகியபோது ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராஜ் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜ் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சதீஷ்குமாரை கைது செய்தார்கள். மேலும் லஞ்சம் பெற இடைத்தரகராக செயல்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரும் கைதானார்.
பணி இடைநீக்கம்
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகே சிவசக்தி நகரில் உள்ள சதீஷ்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரை கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை ஈரோடு ஜெயிலில் உள்ள சதீஷ்குமாரிடம் வருவாய் துறை அதிகாரிகள் வழங்கினர்.