தர்மபுரியில் பூட்டப்பட்ட தனியார் அலுவலகம் மீண்டும் திறப்பு: நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சியில் வரி நிலுவை தொகையை செலுத்தாததால் பூட்டப்பட்ட தனியார் அலுவலகம் அனுமதி இன்றி மீண்டும் திறக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வாடகை நிலுவை
தர்மபுரி நகரில் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் கடைகள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றில் உள்ள நிலுவை தொகையை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவையில் உள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது அதிக வரி நிலுவையில் உள்ள சில தனியார் நிறுவன அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டது. வரி நிலுவை தொகையை உடனடியாக செலுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இவ்வாறு பூட்டப்பட்ட ஒரு தனியார் அலுவலகம் அதிகாரிகளின் முறையான அனுமதி இன்றி மீண்டும் திறக்கப்பட்டது.
பணி இடைநீக்கம்
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் வரி நிலுவை தொகை செலுத்தப்படாததால் பூட்டப்பட்ட தனியார் அலுவலகம் அதிகாரிகளின் அனுமதி இன்றி மீண்டும் திறக்கப்பட்டது தொடர்பாக நகராட்சி வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், உதவியாளர் சரவணன் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் முத்துக்குமார், சரவணன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.