அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மோதல்: டிரைவர்கள் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்


அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மோதல்: டிரைவர்கள் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மோதல் நடந்தது தொடர்பாக டிரைவர்கள் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தொழிற்சங்க நிர்வாகி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கட்டுப்பாட்டாளராக வேலை பார்ப்பவர் யுவராஜ். தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகியான இவர், தனக்கு வேண்டப்பட்ட டிரைவர், கண்டக்டர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு செய்வதாகவும், மற்றவர்களுக்கு பணி வழங்காமல் புறக்கணித்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இதேபோல் அரசு பஸ் டிரைவர் ராஜா என்பவருக்கு பணி வழங்காமல், வேறு ஒரு டிரைவருக்கு பணி வழங்கி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா, கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜிடம் கேட்டார். அப்போது பணிமனையில் இருந்த அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக உருவானது.

தாக்குதல்

இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை தடுத்தனர். இதனிடையே யுவராஜ், ராஜா மோதிக்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மோதல் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் விசாரணை நடத்தினார்.

4 பேர் பணி இடைநீக்கம்

விசாரணையில் யுவராஜ் பாரபட்சமாக செயல்பட்டு, தொழிலாளர்களுக்கு உரிய முறையில் பணி ஒதுக்கீடு வழங்காதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஆதரவாக பாலக்கோடு பணிமனை காவலாளி அருண் செயல்பட்டதும் தெரியவந்தது. இதேபோல் ராஜாவுக்கு, மற்றொரு டிரைவர் சுரேஷ்குமார் ஆதரவாக செயல்பட்டு, மோதலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து கட்டுப்பாட்டாளர் யுவராஜ், டிரைவர்கள் ராஜா, சுரேஷ்குமார் மற்றும் காவலாளி அருண் ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் உத்தரவிட்டார்.


Next Story