பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுயநினைவை இழந்த மாணவர்;4 மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம்கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி டீன் உத்தரவு


பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுயநினைவை இழந்த மாணவர்;4 மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம்கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி டீன் உத்தரவு
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவர் சுயநினைவை இழந்த விவகாரத்தில் 4 மருத்துவ மாணவர்களை இடைநீக்கம் செய்து, கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி டீன் உத்தரவிட்டார்.

மருத்துவக் கல்லூரி மாணவர்

கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்த கல்லூரியில் சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் சபீக் அகமது (வயது 20) என்பவர் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார். சபீக் அகமதுவுக்கு கடந்த 10-ந் தேதி பிறந்த நாளாகும்.

சுயநினைவை இழந்தார்

இவரது பிறந்த நாளை சக மாணவர்கள் விடுதி வளாகத்தில் கொண்டாடினார்கள். அந்த நேரம் மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சபீக் அகமதுவை தூக்கியும் விளையாடினார்கள். அந்த நேரம் கீழே விழுந்த சபீக் அகமது மீது மற்ற மாணவர்கள் ஒருவர் மாறி ஒருவர் விழுந்ததாக தெரிகிறது.

இதனால் சபீக் அகமது கழுத்து பகுதியில் இருந்து மூளைக்கு செல்ல கூடிய நரம்பு துண்டிக்கப்பட்டு, மயங்கினார். நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் பதறி போன சக மாணவர்கள் இது குறித்து விடுதி பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவரை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால் இதுவரை சபீக் அகமது சுய நினைவுக்கு வரவில்லை.

4 மாணவர்கள் இடைநீக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.. இதையடுத்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 4 மருத்துவ மாணவர்களை இடைநீக்கம் செய்து, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ உத்தரவிட்டார். மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிற மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளியில் தங்கி இருந்த மாணவர் சபீக் அகமதுவை கல்லூரி விடுதிக்குள் அழைத்து சென்றது யார்?, அவரை விடுதிக்குள் அனுமதித்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவர் சுயநினைவை இழந்த சம்பவம் மருத்துவக் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story