பள்ளி மானிய தொகையை கையாடல் செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
ஆலங்காயம் அருகே பள்ளி மானிய தொகை ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கையாடல் செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆலங்காயம் அருகே பள்ளி மானிய தொகை ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கையாடல் செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பள்ளி மானிய தொகை கையாடல்
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பலப்பல் நத்தம் நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சி.பாபு (வயது 45). இவர் அந்த பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பொறுப்பு தலைமை ஆசிரியராக அவர் பணியாற்றி வந்த 2019-2020, 2020-2021, 2021-22 ஆகிய கல்வி ஆண்டுகளில் ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகையை வங்கியில் இருந்து எடுத்து பள்ளிக்கு செலவழித்ததாக கணக்கு எழுதி அதன் மூலம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை கையாடல் செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் கடந்த கல்வி ஆண்டுகளில் அவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் மாணவர்களின் கல்வித் திறன் குறைய காரணமாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பலப்பல்நத்தம் நடுநிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷுக்கு, திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உத்தரவிட்டார்.
ஆசிரியர் பணியிடை நீக்கம்
அதன்படி வட்டார கல்வி அலுவலர் கமலநாதன், மேற்பார்வையாளர் மலையன், ஆசிரியர் பயிற்றுநர் தினேஷ் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பலப்பல்நத்தம் நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பட்டதாரி ஆசிரியர் ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகையை பள்ளிக்கு செலவழிக்காமல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கையாடல் செய்திருப்பது உறுதியானது.
கடந்த கல்வி ஆண்டுகளில் அவர் மாணவர்களுக்கு ஒரே ஒரு பாடத்தை மட்டும் நடத்தியுள்ளதும், மாணவர்களிடையே நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்த அறிக்கையை வட்டார கல்வி அலுவலர் கமலநாதன், மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில், ஆசிரியர் பாபுவை, மாவட்ட கல்வி அதிகாரி வேதபிரகாஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.