மாநகராட்சி உதவி என்ஜினீயர் பணி இடைநீக்கம்
வேலூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை அமைக்கப்பட்ட விவகாரத்தில் உதவி என்ஜினீயர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை அமைக்கப்பட்ட விவகாரத்தில் உதவி என்ஜினீயர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற சாலை
வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் அன்னை கஸ்தூரிபாய் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் கடந்த 1-ந் தேதி தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாருடன் ஜல்லிகற்கள் ஒட்டாமல் நடக்கும்போதே ஜல்லிகற்கள் சாலையில் இருந்து பெயர்ந்து வரும் நிலையில் இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் இருந்து வெறும் கைகளால் ஜல்லிக்கற்களை அள்ளி கீழே கொட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து தரமற்ற சாலை குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
பணியிடை நீக்கம்
இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், சாலை அமைக்கப்பட்ட போது மழை பெய்ததால் சில அடி தூரம் சாலையில் தாருடன் ஜல்லிக்கற்கள் ஒட்டாத நிலை இருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது என்றார்.
சாலை அமைத்தபோது அதை முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி என்ஜினீயர் ஆறுமுகம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்தபகுதியில் நேற்று புதிய சாலையும் அமைக்கப்பட்டது.