கெலமங்கலம் அருகே பரபரப்பு: புதையல் எடுக்க சென்ற தொழிலாளி மர்ம சாவு-குழிக்குள் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்


கெலமங்கலம் அருகே பரபரப்பு: புதையல் எடுக்க சென்ற தொழிலாளி மர்ம சாவு-குழிக்குள் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே விவசாய நிலத்தில் புதையல் எடுக்க சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

புதையல் எடுக்க பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாதனூர் ஊராட்சி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு நாகராஜ் (24), சிவகுமார் (22) என்ற மகன்களும், தனலட்சுமி (20) என்ற மகளும் உள்ளனர்.

லட்சுமணன் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையலுக்காக குழி தோண்டினார். அதில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கோழியை பலியிட்டு வழிபாடு நடத்தியதாக தெரிகிறது.

மர்ம சாவு

பூஜை செய்த சிறிது நேரத்திலேயே அவர் அதே குழியில் உட்கார்ந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். லட்சுமணன் மர்மமாக இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் லட்சுமணன் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

லட்சுமணனின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால் அவர் எவ்வாறு இறந்தார்? என்ற குழப்பம் நீடிக்கிறது. அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது அவர் தானாகவே உயிரிழந்தாரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதையலுக்காக தோண்டப்பட்ட குழியில் தொழிலாளி மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story