வடமதுரை உள்பட 3 பேரூராட்சிகளில் தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம்
வடமதுரை, பாளையம், அம்மையநாயக்கனூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வடமதுரை, பாளையம், அம்மையநாயக்கனூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூய்மை திட்டம்
வடமதுரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மை திட்ட சிறப்பு முகாம் மற்றும் 'எனது குப்பை எனது பொறுப்பு' என்ற தலைப்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. இதையொட்டி பேரூராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள், பணியாளர்கள் சார்பில் தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் அவர்கள் வடமதுரை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீலநிற தொட்டியிலும், தீங்குவிளைவிக்கும் குப்பைகளை தனியாகவும் சேகரித்து பேரூராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமில் பேரூராட்சி தலைவர் நிருபாராணி, துணைத்தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் செல்வராஜ், இளநிலை உதவியாளர் அபிராமி, வடமதுரை நகர தி.மு.க. செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பாளையம் பேரூராட்சியில் நடந்த முகாமிற்கு பேரூராட்சி தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு, பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தூய்மை திட்டம் குறித்தும், மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அம்மையநாயக்கனூர்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் நடந்த முகாமிற்கு, மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவரும், தி.மு.க. பேரூர் செயலாளருமான எஸ்.பி.செல்வராஜ் வரவேற்றார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர் விமல்குமார், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் முகமது நசீர், கருணாகரன், மீனாட்சி, முத்துலட்சுமி, காசியம்மாள், செல்வி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள், அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நாகையகவுண்டன்பட்டி, கொடைரோடு, நக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று தூய்மை திட்டம் குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதுதவிர முகாமில் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டது. மேலும் தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.