தங்க ஊஞ்சலில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்
ராமேசுவரம் கோவிலில் புது பள்ளியறை நிகழ்ச்சியின் போது தங்க ஊஞ்சலில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் புது பள்ளியறை நிகழ்ச்சியின் போது தங்க ஊஞ்சலில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம் கோவில்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த மாதம் 24-ந் தேதி அன்று கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து புது பள்ளியறை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக நேற்று முன்தினம் இரவு கருவறையில் இருந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்ட தங்கத்தினால் ஆன சிலையை கோவில் குருக்கள் கையில் எடுத்து தூக்கி கொண்டு வந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் வைத்தார்.
இதை தொடர்ந்து கோவில் குருக்கள் பலர் சுவாமி சிலை வைக்கப்பட்ட அந்த வெள்ளி பல்லக்கை கோவிலின் முதல் பிரகாரம் வழியாக சுற்றி தூக்கி வந்தனர். இரண்டாம் பிரகாரம் வழியாக அம்பாள் சன்னதி பிரகாரத்தில் உள்ள புது பள்ளியறை எதிரே பல்லக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பல்லக்கில் இருந்த சுவாமி சிலையானது ஏராளமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த புது பள்ளியறையில் உள்ள தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்டது.
தங்க ஊஞ்சல்
தொடர்ந்து தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்ட சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. இந்த புது பள்ளியறை பூஜையில் கோவிலின் செயல் அலுவலர் விஜயலட்சுமி, பேஷ்கார் பஞ்சமூர்த்தி, பா.ஜனதா மாவட்ட பார்வையாளர் முரளிதரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பள்ளியறை பூஜையை பாஸ்கர ஜோஷி குருக்கள் தலைமையில் கோவில் குருக்கள் செய்தனர்.
புது பள்ளியறை பூஜையன்று மட்டும் ஒரு நாள் கருவறையிலிருந்து சாமி வெள்ளி பல்லக்கில் வைத்து புது பள்ளியறைக்கு கொண்டுவரப்படும். மற்ற நாட்களில் மர பல்லக்கிலேயே சாமி வைக்கப்பட்டு பள்ளியறைக்கு கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.