மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் சுவாமி காட்சி அளித்தார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் சுவாமி காட்சி அளித்தார்.
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் சுவாமி காட்சி அளித்தார்.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் சுவாமி காட்சி அளித்தார். விழாவில் 2 ஆண்டுக்கு பிறகு ஆவணி மூலவீதியில் சுவாமி வீதி உலா நடந்தது.

ஆவணி மூலத்திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்கள் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புராட்டாசி, தை, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதில் சித்திரை திருவிழாவில் தான் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதைதொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் ஆட்சி புரிபவர். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. சம்பவத்தன்று திருவிழாவிற்கான கொடி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய சுந்தரேவரர் சுவாமி, மீனாட்சி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் 28-ந் தேதி வரை கோவிலுக்குள் 2-ம் பிரகாரத்தில் சந்திரசேகர் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருவிளையாடல் லீலை

திருவிளையாடல் நடைபெறும் முக்கிய விழாக்கள் நேற்று முதல் தொடங்கியது. அதில் கருங்குருவிக்கு உபதேசம், இன்று நாரைக்கு முக்தி கொடுத்தல், நாளை மாணிக்கம் விற்ற லீலை, 1-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 2-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 3-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.

4-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 7-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 8-ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 9-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

2 ஆண்டு பிறகு வீதி உலா

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழா கோவிலின் உள்ளே நடந்தது. தற்போது கொரோனா இல்லாததால் சுவாமி ஆவணி மூலவீதியில் வலம் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் ரோடு முழுவதும் புதிததாக அமைக்கப்பட்டதால் சுவாமி ஆவணி மூலவீதியில் வருவதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. அதன்படி நேற்று காலை 2 ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி ஆவணி மூல வீதியில் வலம் வருவதை காண அந்த பகுதியில் பக்தர்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர்.

கருங்குருவிக்கு உபதேசம்

அப்போது சுவாமி கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த திருவிளையாடல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:

ஒருவன் முற்பிறவியில் சிறிது பாவம் செய்ததால், அவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் துன்புறுத்தின. அவற்றிக்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து தன்னுடைய நிலையை எண்ணி வருந்தியது.

அச்சமயம் அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர் மதுரையை பற்றியும், பொற்றாமரைக்குளத்திலே நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். அதை கேட்ட கருங்குருவி நேராக மதுரைக்கு பறந்து பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை வணங்கியது.

இதை கண்ட இறைவன் குருவியின் பக்திக்கு இறங்கி மிருத்யுஞ்சிய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இறைவன் கருங்குருவியின் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story