சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 12 நாட்கள் நடக்கிறது


சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா   12 நாட்கள் நடக்கிறது
x

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 12 நாட்கள் நடக்கிறது.

தஞ்சாவூர்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 12 நாட்கள் நடக்கிறது.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். சூரபத்மனை, முருகன் வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வு கந்த சஷ்டி திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 24-ந் தேதி அன்று இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞையுடன் தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 25-ந் தேதி சந்திரசேகரர், அம்பாள், வள்ளி-தெய்வானை, சண்முகர் சமேதரமாக, வீரகேசரி, வீரபாகு உடன் மலைக்கோவிலில் இருந்து படியிறங்கி உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

சூரபத்மன் வதம்

அதைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 30-ந் தேதி வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன், சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்வும் மற்றும் கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கிற நிகழ்வும் தெற்கு வீதியில் சூர பத்மனை வதம் செய்கின்ற நிகழ்வும் நடக்கிறது.

31-ந் தேதி சண்முகர் காவிரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்னர் 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவ விழா நடக்கிறது.

சிறப்பு ஏற்பாடுகள்

விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கற்கண்டு பால் வழங்க கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


Next Story