ஆகஸ்ட் 14-ம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல்


ஆகஸ்ட் 14-ம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல்
x
தினத்தந்தி 9 Aug 2023 3:48 PM IST (Updated: 9 Aug 2023 3:53 PM IST)
t-max-icont-min-icon

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள்களை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.

அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டது.

ஆனால் இந்த கல்வி ஆண்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரு வாரங்கள் கழித்து தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72லட்சம் மாணவ மாணவியர்களும், 54,439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் பயன்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story