தீபாவளி பண்டிகையையொட்டி 25 டன் இனிப்புகள் விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி 25 டன் இனிப்புகள் விற்பனை
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி 25 டன் இனிப்புகளும், 15 டன் கார வகைகளும் விற்பனையானது.

தீபாவளி பண்டிகை

இந்துக்கள் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு வீடுகள் தோறும் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு மற்றும் காரம் வழங்கி பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், பள்ளி-கல்லூரிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு, கார வகைகள் வழங்கப்பட்டு தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் கடந்த ஒரு வார காலமாக இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. மேலும் சமையல் கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் என தனித்தனியாக திருமண மண்டபங்களில் இனிப்பு மட்டும் கார வகைகளை தயாரித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். தர்மபுரி நகரில் உள்ள அனைத்து இனிப்பு கடைகள் மற்றும் பேக்கரிகளில் இந்த ஆண்டு வழக்கத்துக்கும் அதிகமாக இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனையாகியது.

ரூ.15 கோடி விற்பனை

கடந்த 5 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இனிப்பு கடைகள் பேக்கரிகள், ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் சுமார் 25 டன் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 15 டன் கார வகைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இனிப்பு வகைகள் ரூ.10 கோடிக்கும், கார வகைகள் ரூ.5 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

பெரும்பாலான கடைகளில் இந்த ஆண்டு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு கடைசி நேரத்தில் கடைகளை பூட்ட வேண்டிய நிலை வந்தது. அந்த அளவுக்கு இந்த ஆண்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்துள்ளது. தர்மபுரி நகரிலுள்ள பெரும்பாலான இனிப்பு கடைகளில் இந்த ஆண்டு அதிக அளவில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை ஆகி உள்ளது. தர்மபுரி நகரில் மட்டும் ரூ.10 கோடி மதிப்புள்ள இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனையாகியுள்ளது என்று உற்பத்தியாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Next Story