மனசும் உடலும் லேசாக...நீந்தலாம் வாங்க..


மனசும் உடலும் லேசாக...நீந்தலாம் வாங்க..
x
திருப்பூர்


அம்மிக்கல், ஆட்டுக்கல்லுக்கு மாற்றாக மிக்சி, கிரைண்டர், சைக்கிளுக்கு மாற்றாக மோட்டார் சைக்கிள், ஏரோட்டுவதற்கு டிராக்டர் என அனைத்தும் எந்திரமயமாகி விட்டது. இதனால் மனிதனும் எந்திரமயமான செயல்பாடுகளுக்கு சொந்தக்காரனாகி ஒரே விதமான, உடல் உழைப்பு குறைந்த பணிகளை மேற்கொள்ளும் நிலை உருவாக்கி விட்டது.

எடை குறைப்பு

நமது பாரம்பரிய கம்பங்கூழ், கேப்பைக்களி, சோளச்சோறு உள்ளிட்ட உணவுகள் ஓரங்கட்டப்பட்டு பீட்சா, பர்க்கர் போன்ற உணவுகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டன.இதனால் 3 வேளை சாப்பாடு 4 வேளை மாத்திரை என்று சொல்லுமளவுக்கு உணவுக்கு இணையாக மாத்திரைகளும் சாப்பிடுமளவுக்கு பலரும் நோயாளிகளாக மாறி விட்டார்கள். இதனால் தொப்பை என்ற தேவையற்ற சுமையைக் குறைக்க தினசரி நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை பலருக்கு உள்ளது.

இந்த நிலையில் உச்சி முதல் பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளுக்கும் ஒரே நேரத்தில் வேலை கொடுக்கக் கூடிய மிகச் சிறந்த பயிற்சியான நீச்சல் பயிற்சியை நாம் மறந்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். நீச்சல் என்பது வெளி உறுப்புகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளுக்கும் நன்மை தரக்கூடிய மிகச் சிறந்த பயிற்சியாகும். இதயம், நுரையீரலை பலப்படுத்தக் கூடிய சக்தி நீச்சலுக்கு உள்ளது.உடல் எடையைக் குறைப்பதுடன் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி நீச்சலுக்கு உள்ளது. இத்தனை அற்புதமான நீச்சல் பயிற்சியை நாம் கோட்டை விட்டு விட்டு வீதிகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் மூச்சு வாங்க நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.

3 பங்கு தண்ணீர்

நீச்சல் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்லாமல், உயிர் காக்கும் அற்புத கலையாகவும் உள்ளது.இன்றைய நிலையில் கிராமப்புறங்களில் உள்ளவர்களில் கூட பலரும் நீச்சல் தெரியாதவர்களாகவே உள்ளனர்.நகரப் பகுதிகளில் உள்ளவர்கள் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது.ஆண்டிராய்டு போன்களின் வரவுக்குப் பிறகு விளையாடுவதற்குக்கூட நேரம் ஒதுக்க முடியாத நிலையிலேயே சிறுவர்கள் உள்ளனர். இதில் நீச்சல் பயிற்சிக்கான சூழலும் குறைவாகவே உள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கும் போது மற்றவர்களை மட்டுமல்ல தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையிலேயே பலரும் உள்ளனர்.இந்த உலகம் 3 பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.அனைவருக்கும் நீச்சல் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

கோடை விடுமுறை

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.ஆனால் கோடை விடுமுறை என்றதுமே'கொலம்பஸ்..கொலம்பஸ்..விட்டாச்சு லீவு' என்ற கொண்டாட்டமான மன நிலை குழந்தைகளிடம் ஏற்பட்டு விடுகிறது.விடுமுறையை எப்படியெல்லாம் கழிக்கலாம் என்ற திட்டங்கள் தொடங்கி விடுகிறது.உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா தலங்களுக்கு செல்வது, நண்பர்களோடு ஊர் சுற்றுவது என அவர்களின் பட்டியல் மிக நீண்டதாக இருக்கிறது.ஆனால் பணிச்சுமை, பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத நிலையிலேயே பல பெற்றோர் உள்ளனர்.இதனால் நண்பர்களோடு ஊர் சுற்றுவது என்ற செலவில்லாத உற்சாகத்தை பல குழந்தைகள் தேர்வு செய்கின்றனர்.அப்போது அவர்களின் ஆர்வம் உற்சாகக் குளியல் நோக்கி திரும்புகிறது.

கல் குவாரி பள்ளங்கள்

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நீர்நிலைகளில் உற்சாகக் குளியல் போடுவது, மீன் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.ஆனால் உற்சாகம் மிகுதியால் தங்களுக்கு நீச்சல் தெரியாது என்பதையே மறந்து விடுகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் ஒருசில சிறுவர்கள் ஆர்வக் கோளாறால் கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளங்களில் தேங்கியுள்ள நீர், ஆழமான கிணறுகள், சேறு நிறைந்த குளங்கள், சுழல் உள்ள ஆறுகள் போன்றவற்றில் குளித்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே இந்த கோடை விடுமுறை முடியும் வரை பெற்றோர் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.முடிந்தவர்கள் நேரம் ஒதுக்கி அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள்.அவ்வாறு செய்ய முடியாவிட்டால் ஏதாவது ஒரு வகையில் குழந்தைகளை சந்தோஷப்படுத்துங்கள்.

மனசும் உடலும் லேசாக...நீந்தலாம் வாங்க..

(உடுமலை எம்.ரங்கசாமி):- தினசரி செய்தித்தாள்களில் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி, ஏரியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு என பலவிதமான செய்திகளை படிக்கிறோம்.ஆனால் யாரும் நீச்சல் தெரியாததால் ஏற்பட்ட விபரீதம் இது என்று சிந்திப்பதற்குக் கூட நேரம் ஒதுக்குவதில்லை.பணத்துக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையில் ஆரோக்கியத்தை இழந்த பிறகே அதனை தேடத் தொடங்குகிறோம்.நீச்சல் என்பது உடலுக்கும் மனதுக்கும் சிறந்த பயிற்சி என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

உடுமலை கல்லூரி மாணவி பி.பிரணயா:-இளைய தலைமுறைக்கு கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.ஆனால் எதைக் கற்றுக் கொள்வது என்பதில் தான் கோட்டை விட்டு விடுகிறோம்.தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்குவது மட்டுமே லட்சியம் என்பது தான் தங்கள் பிள்ளைகளின் கடமை என்று தான் பெற்றோரும் நினைக்கிறார்கள்.அதேநேரத்தில் நீச்சல் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.ஏனென்றால் நகரப்பகுதிகளில் நீச்சல் பயிற்சி என்பதும் அதிக பொருட்ச்செலவு பிடிக்கும் ஒன்றாக மாறி விட்டது.எனவே விடுமுறைக் காலங்களில் இலவச நீச்சல் பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் நல்லது.


Next Story