போட்டித்தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும்


போட்டித்தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என திருவாரூரில் நடந்த மண்டல அளவிலான கல்வி கொள்கை கருத்துக் கேட்பு கூட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தினர்.

திருவாரூர்

போட்டித்தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என திருவாரூரில் நடந்த மண்டல அளவிலான கல்வி கொள்கை கருத்துக் கேட்பு கூட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகேட்பு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுத்தலைவரும், முன்னாள் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுமான டி.முருகேசன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு மாநில கல்வி கொள்கை குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதில் மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

மாணவர்களுக்கு தனி பஸ்வசதி

கிராமப்புறங்களில் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தனியாக மாணவர்களுக்கு என பஸ் இயக்கினால் மிகுந்த பயன் அளிக்கும். பல பள்ளிகளில் சத்துணவு அமர்ந்து சாப்பிட கூட வசதியில்லாமல் உள்ளது. அனைத்து பள்ளிகளும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்திட வேண்டும். உடற்கல்வி, யோகா கற்பிக்க வேண்டும். குறிப்பாக திறன் பயிற்சி வகுப்புகள் நடத்திட வேண்டும்.

பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்க வேண்டும்

பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்கப்பட்டு மாணவர்களின் கோரிக்கைளை கலைந்திட வேண்டும். புகார் பெட்டி குறித்து தனி கமிட்டி அமைப்பதுடன், அதில் மாணவர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும். போட்டித்தேர்வுக்களுக்கு ஏற்ப வகையில் பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். தொழிற் படிப்புகள் கற்பிக்க வேண்டும். தமிழ் வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும். போதிய வகுப்பறை வசதி, நூலக வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கல்வி கொள்கை குறித்த கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாநில கல்வி கொள்கை உறுப்பினர்கள் ஜவஹர் நேசன், ராமானுஜம், சுல்தான் அகமது இஸ்மாயில், சீனிவாசன், அருணா ரத்தினம், பாலு, ஜெய்ஸ்ரீ தாமோதரன், செயலக உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story