புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் ரூ.7¾ கோடியில் செயற்கை இழை ஓடுதளம்
புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கம் விரைவில் புதுப்பொலிவு பெற உள்ளது. ரூ.7¾ கோடியில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது.
மாவட்ட விளையாட்டரங்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடகளம், நீச்சல், குத்துச்சண்டை, பளு தூக்குதல், கபடி உள்ளிட்ட போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்து வருகின்றனர். மாநில, தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை தட்டிச்சென்று பெருமை சேர்த்துள்ளனர். வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு மாவட்ட விளையாட்டரங்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட விளையாட்டரங்கத்திலும் வீரர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, ஆக்கி, கால்பந்து, கோ-கோ, கபடி, பாக்சிங் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட தனி வசதி உள்ளன. டென்னிஸ் விளையாட்டு மைதானமும் இருக்கிறது. இறகுபந்து உள் விளையாட்டரங்கமும் உள்ளன.
செயற்கை இழை ஓடுதளம்
இந்த நிலையில் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு மேலும் பல்வேறு நவீன அடிப்படை வசதிகள் தேவையாக உள்ளன. இதனால் மாவட்ட விளையாட்டரங்கத்தை புதுப்பொலிவுடன் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.7 கோடியே 70 லட்சம் செலவில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இதேபோல் உள் விளையாட்டரங்கம் கட்டப்பட்டு வரும் பணி பாதியில் நின்ற நிலையில் அதற்கு உரிய பணம் ஒதுக்கி புதிதாக ஒப்பந்தம் விடப்பட்டு 4 மாதத்தில் விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பழுதடைந்துள்ள நீச்சல் குளத்தையும் புதுப்பிக்க உள்ளனர். இதுதவிர உடற்பயிற்சி கூடம் மற்றும் பாக்சிங் உள்ளிட்டவற்றிலும் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
புதுப்பொலிவுடன்...
இதேபோல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையும் புதுப்பிக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் களைந்து புதிதாக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி புதுப்பொலிவுடன் மாவட்ட விளையாட்டரங்கத்தை உருவாக்க தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு துறை அமைச்சராக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மெய்யநாதனிடமும் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் அவரும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய பணிகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார். அவரும் மாவட்ட விளையாட்டரங்கம் புதுப்பிக்கப்படும் என உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.