வடமாநில தொழிலாளர்களை எரித்துக்கொல்ல முயற்சி:தற்காலிக சோதனை சாவடிகள் அமைப்பு


வடமாநில தொழிலாளர்களை எரித்துக்கொல்ல முயற்சி:தற்காலிக சோதனை சாவடிகள் அமைப்பு
x

ஜேடர்பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்கள் எரித்துக்கொல்ல முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

4 பேர் படுகாயம்

பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது வெல்ல ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராகேஷ் (வயது 19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது மர்மநபர்கள் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே நேற்றுமுன்தினம் இரவு சரளைமேடு பகுதியில் உள்ள முத்துசாமிக்கு சொந்தமான கரும்பு ஆலைக்கு தீவைக்கப்பட்ட இடம், வடகரையாத்தூர் மற்றும் வீ.கரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

துப்பாக்கி ஏந்திய போலீசார்

இந்தநிலையியில் கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (நாமக்கல்), சக்திகணேசன் (ஈரோடு) உள்ளிட்டோர் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வெல்ல ஆலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் கூறியதாவது:- குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதியில் 14 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவில் 20 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

14 தனிப்படைகள் அமைப்பு

14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கரும்பு ஆலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சாராயம் விற்பனை ஏதும் இல்லை என மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறினார்.


Next Story