குழந்தைகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை இன்று வினியோகம்
திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) குடற்புழுநீக்க மாத்திரை வினியோகம் செய்யப்பட உள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) குடற்புழுநீக்க மாத்திரை வினியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடற்புழு நீக்க நாள்
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி 1 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நலமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும்.
4 லட்சம் பேருக்கு...
திருவாரூர் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 4 லட்சத்து 15 ஆயிரத்து 993 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த பொது சுகாதாரம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயதிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகள், 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி செல்லாதவர்களுக்கு மாத்திரை வழங்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் (1 முதல் 12-ம் வகுப்பு வரை) பள்ளிகளிலும், கல்லூரிகளில் 19 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மாத்திரை வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.
குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் மாத்திரை வழங்கக்கூடாது. இன்று மாத்திரை பெற்றுக்கொள்ளாதவர்கள் வருகிற 21-ந் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை தடுக்கப்படுகிறது.
குழந்தைகள் நலன்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி அவர்களது நலனை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.