டிராக்டருக்கு மானியம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் தாட்கோ மேலாளர்- உதவியாளர் கைது
டிராக்டருக்கு மானியம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்- உதவியாளர் கைதுமாறுவேடத்தில் சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்
சேலம்
டிராக்டருக்கு மானியம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் சென்று பிடித்து கைது செய்தனர்.
டிராக்டர் மானியம்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மணியார்குண்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. இவர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் கடன் மூலம் பெற சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்தார்.
அவரது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நேர்காணல் நடத்தப்பட்டது. பின்னர் ரூ.7½ லட்சம் மதிப்பிலான டிராக்டர் வங்கி மூலம் கடன் பெற அவருக்கு தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் அனுமதி வழங்கப்பட்டது. டிராக்டர் வாங்க அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தொகை வழங்குவதற்காக அவர் தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
புகார்
மானியம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று தாட்கோ மேலாளர் (பொறுப்பு) ஜி.சாந்தி, குமாரிடம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை நேற்று குமாரிடம் கொடுத்து அனுப்பினர்.
மாறுவேடத்தில் சென்று மடக்கினர்
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் மாறு வேடத்தில் அதாவது லுங்கி அணிந்தபடி சென்றனர். அப்போது குமார் லஞ்ச பணம் ரூ.15 ஆயிரத்தை மேலாளர் (பொறுப்பு) ஜி.சாந்தியிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை தற்காலிக பணியாளர் எம்.சாந்தியிடம் கொடுக்கும் படி அவர் கூறினார்.
இதையடுத்து குமார், அவரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தாட்கோ மேலாளர் ஜி.சாந்தி, உதவியாளர் எம்.சாந்தி ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.