மணல் கடத்தல் குறித்து புகார் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருந்த தாசில்தார்
பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் மணல்கடத்தல் குறித்து புகார் அளிக்க வந்த தாசில்தாரை மணிக்கணக்கில் காக்கவைத்த சம்பவம் வருவாய்த்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் மணல்கடத்தல் குறித்து புகார் அளிக்க வந்த தாசில்தாரை மணிக்கணக்கில் காக்கவைத்த சம்பவம் வருவாய்த்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணல் கடத்தல்
பேரணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி, பத்தலப்பல்லி மலட்டாறு பகுதிகளில் மணலை சேகரித்து வைத்து, இரவு நேரத்தில் கடத்த தயாராக உள்ளதாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடியாத்தம் சப்- கலெக்டர் வெங்கட்ராமன் இரவு 9.30 மணியளவில் பல்லலகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருடன் பேரணாம்பட்டு அருகே உள்ள பண்டாரவாடை ஆற்றங்கரை பகுதியில் ரோந்துசென்று சோதனையிட்டார்.
அப்போது ஆற்றங்கரை பகுதியிலிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல், தென்னந்தோப்பில் மறைவாக நிறுத்தி வைத்திருந்ததை பொக்லைன் எந்திரம் ஆகியரற்றை கண்டறிந்து உடனடியாக பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறனுக்கு தகவல் தெரிவித்து மணலையும், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் படி உத்தரவிட்டார்.
1½ மண் நேரம் காத்திருப்பு
அதன்பேரில் தாசில்தார் நெடுமாறன் தலைமையில், மண்டல துணை தாசில்தார் வடிவேல், கிராமநிர்வாக அலுவலர்கள் ஜெயக்குமார், அருண், கிராம உதவியாளர் குப்புசாமி ஆகியோர் பண்டாரவாடை ஆற்றங்கரை பகுதிக்கு சென்று சுமார் 40 யூனிட் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் தாசில்தார் நெடுமாறன் சென்று மணல் கடத்தலில் ஈடுபட்ட பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சரவணன் மீது புகார் கொடுக்க பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு இல்லாததால் சுமார் 1¼ மணி நேரம் தாசில்தார் காத்திருந்தும் இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. வேறு வழியின்றி தாசில்தார் அங்கிருந்த போலீஸ்காரர் சரவணின் செல்போனிலிருந்து இன்ஸ்பெக்டர் ராஜன் பாபுவை தொடர்பு கொண்டு பேசியதற்கு பொக்லைன் எந்திரத்தை டிரைவர் வைத்து எடுத்து வந்தால் மட்டுமே வழக்குப் பதிவு செய்வதாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
வருவாய்த்துறையினர் அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த தாசில்தார் உடனடியாக வேலூர் மாவட்ட கலெக்டர், குடியாத்தம் சப்- கலெக்டர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தார். பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் போலீஸ் நிலையத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, வருவாய் துறையினரிடம் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்ய டிரைவரை ஏற்பாடு செய்யுங்கள் அல்லது காவலுக்கு ஆளை போடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.
பின்னர் காலையில் வருவாய்த் துறையினர் மெக்கானிக் ஒருவரை வரவழைத்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். நீண்ட நேர இழுபறிக்கு பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு, மணல் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவான பேரணாம்பட்டை சேர்ந்த சரவணன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தார்.
மணலை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் புகதார் அளிக்க வந்த தாசில்தாரை, இன்ஸ்பெக்டர் மணிக் கணக்கில் காக்க வைத்த சம்பவம் வருவாய் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.