'ரெடிமெடு' ஆடைகள் வரவு அதிகரிப்பு; தையல் தொழில் நலிவடைகிறதா?-தையல் கலைஞர்கள் கருத்து
‘ரெடிமெடு’ ஆடைகள் வரவு அதிகரித்துள்ளதால் தையல் தொழில் நலிவடைகிறதா? என்பது குறித்து தையல் கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணி மணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப 'ரெடிமெடு' என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமாகின.
குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைவருக்கும் இந்த ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. கடைகளுக்கு நேரடியாகச் சென்று, விருப்பான உடையை, விரும்பிய கலரில் தேர்வு செய்து, கண்ணாடிமுன் நின்று அணிந்து அழகு பார்க்கும் வசதி இருக்கிறது.
இதனால் துணி எடுத்து தைத்து அணிய வேண்டும் என்ற பழக்கம் குறைந்த வருகிறது. இதன் காரணமாக தையல் தொழில் நசிந்து வருகிறதோ? தையல் கலைஞர்கள் நலிந்து வருகிறார்களோ? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
அதே நேரம் ரெடிமேடாகவே தைத்தாலும் அதையும் தொழிலாளர்கள்தானே தைக்கிறார்கள். பெண்களுக்கான பிளவுசுகள் ரெடிமேடாக வந்தாலும் இளம் பெண்கள் மாடலாக தைத்து அணிவதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கு பிளவுசுகள் தைக்க பிரத்தியேகமாக நிறையக் கடைகள் முளைத்திருக்கின்றன.
திருமணம் மற்றும் விழாக்களின் போது பெண்கள் கட்டும் சேலைகளுக்கு மேட்சாக, பிளவுசுகளில் முத்துக்களை கோத்தாற்போல் பாசிகளில், பல வண்ண சித்திர வேலைப்பாடுகள் செய்து தருகிறார்கள்.
'ஆரி ஒர்க்' என்று இதைச் சொல்கிறார்கள். அவ்வாறு வேலைப்பாடுகளுடன் ஒரு பிளவுசு தைக்க ஆயிரம், இரண்டாயிரம் அல்ல; ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என கூலி ஆகுமாம்.
எனவே தையல் தொழில் நசிந்து வருக்கிறதா? நாகரிகத்திற்கு ஏற்றவாறு வேறு போக்கில் வளர்ந்து இருக்கிறதா? தையல் கலைஞர்களின் நிலை என்ன? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
ரெடிமேடு ஆடைகள்
லாரன்ஸ் (தையல் கடை உரிமையாளர், திண்டுக்கல்):- கடந்த 30 ஆண்டுகளாக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். முன்பெல்லாம் ரெடிமேடு ஆடைகள் கிடையாது. தையல் கடைகளில் தைக்கப்பட்ட ஆடைகளை தான் பொதுமக்கள் பயன்படுத்தினர். ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல. பல்வேறு அளவுகளில் பல வண்ண ரெடிமேடு ஆடைகள் ஜவுளிக்கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால் துணிகளை வாங்கி தைத்து அணிய பலர் விரும்புவதில்லை. தாங்கள் விரும்பும் அளவில் ஆடைகள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மட்டுமே தற்போது வரை தையல் கடைகளை தேடி வருகின்றனர். முன்பெல்லாம் துணிகளை குறிப்பிட்ட தேதியில் தைத்து கொடுக்க முடியாத அளவுக்கு ஆர்டர்கள் வந்துகொண்டே இருக்கும். அப்போது எனது கடையில் 6 பேருக்கு மேல் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். ஆனால் தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே துணிகளை தைக்க கொடுக்கின்றனர். இதனால் வேலையாட்களை குறைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. மேலும் தற்போது மின்கட்டணமும் பலமடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக ரூ.800 மின்கட்டணமாக செலுத்தினேன். தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது தையல் தொழில் அழிவின் பாதையை நோக்கி செல்வதை தான் காட்டுகிறது.
சாரதா (தையல் தொழிலாளி, திண்டுக்கல் கோவிந்தராஜ்நகர்):- துணிகளை தைக்க பயன்படுத்தும் ஊசி, நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை தற்போது உயர்ந்துவிட்டது. மேலும் மின்கட்டணமும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தையல் கூலியை உயர்த்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். தையல் கூலியை உயர்த்தியதால் ரெடிமேடு ஆடைகளை பொதுமக்கள் நாடிச்செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் தையல் தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. கணவர்களை இழந்த பல பெண்களுக்கு கைகொடுத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய தையல் தொழில் இன்று புயலில் சிக்கிய படகு போல் தத்தளிக்கிறது. தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தையல் தொழில் பாதிப்பு
பொன் கவியரசு (தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், பழனி):- திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுப்போம். சில நிகழ்ச்சிகளில் குழு நடனம் இடம்பெறும். அதில் நடனம் ஆடுபவர்களுக்கு ஒரே வண்ணத்தில் ஆடைகளை தைத்து கொடுப்போம். இதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஜவுளிக்கடைகளில் நாம் விரும்பும் நிறத்தில் எத்தனை ஆடைகள் வேண்டுமானாலும் ரெடிமேடாகவே கிடைக்கிறது. இதனால் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும் எளிதாக இருப்பதால் தையல் கடைகளை தேடி செல்வது குறைந்துள்ளது.
பரமேஸ்வரன் (தையல் தொழிலாளி, பழனி):- ரெடிமேடு ஆடைகளின் வருகையால் தையல் தொழில் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. துணி வாங்கும் செலவு, தையல் கூலி ஆகியவற்றை கணக்கிடும் போது ரெடிமேடு ஆடைகளின் விலை குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெடிமேடு ஆடைகளை நாடிச்செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் எங்களை போன்ற தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் தையல் தொழிலை கைவிட்டு வேறு வேலை தேடிச்செல்லும் நிலை எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுவிடும்.
நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்
ராமலட்சுமி (குடும்ப தலைவி, நத்தம்):- டெய்லரிடம் தைப்பதற்காக கொடுத்த ஆடைகளை வாங்குவதற்காக நாம் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். உதாரணமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையையொட்டி துணிகளை தைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முன்பே துணிகளை வாங்கி டெய்லரிடம் கொடுக்க வேண்டும். அப்போது தான் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு அல்லது பண்டிகை அன்று அதிகாலையாவது நமக்கு ஆடைகள் கிடைக்கும்.
அதற்கும் நாம் முந்தைய நாள் இரவு முழுவதும் தையல் கடைக்கும், வீட்டுக்கும் நடையாய் நடக்க வேண்டும். பண்டிக்கையை கொண்டாட இறைச்சி கூட எளிதில் வாங்கிவிடலாம். ஆனால் டெய்லரிடம் தைக்க கொடுத்த ஆடைகளை வாங்குவதற்குள் முழி பிதுங்கிவிடும். மேலும் பிரபல டெய்லர்கள் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள்ளேயே 'ஹவுஸ்புல்' போர்டை கடைக்கு முன்பு வைத்து விடுவார்கள். இதனால் துணிகளை தைக்க வேறு தையல் கடைகளை தேடி நாம் அலைய வேண்டும்.
ஆனால் ரெடிமேடு ஆடைகள் அப்படி அல்ல. பண்டிகை நாளுக்கு முந்தைய நாள் கூட கடைகளுக்கு சென்று நமக்கு பிடித்த ஆடைகளை குறைந்த விலையில் வாங்க முடியும். இதனாலேயே ரெடிமேடு ஆடைகளை வாங்கி அணிய மக்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
என்னதான் ரெடிமெடு ஆடைகள் வந்தாலும், துணியை எடுத்து தையல் தொழிலாளியிடம் தைத்து உடுத்துவதை இன்னும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரெடிமெடு ஆடை விலையை காட்டிலும் தையல் தொழிலாளர்கள் கேட்கும் தையல் கூலி அதிகம் என்ற ஆதங்கமும் மக்களிடையே இருக்கிறது.