தாளவாடி வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ அணைக்கப்பட்டது
தாளவாடி வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ அணைக்கப்பட்டது. இந்த காட்டுத்தீயில் வனப்பகுதியில் உள்ள பல ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது.
தாளவாடி
தாளவாடி வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ அணைக்கப்பட்டது. இந்த காட்டுத்தீயில் வனப்பகுதியில் உள்ள பல ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது.
10 வனச்சரகங்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் வனப்பகுதி ஆகும். 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப்பகுதியை கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், ஜீர்கள்ளி, விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூர் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வறட்சி
இயற்கை எழில் கொஞ்சும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகின்றன. நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து விடுவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
காட்டுத்தீ
இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட கும்டாபுரம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை நடந்து சென்று இலை, தழைகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 10 மணி அளவில் காட்டுத்தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து சாம்பல் ஆனது.