திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை திட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் 3 வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்.

தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். அதிகபட்சம் உதவித்தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது

ரூ.12 லட்சம் வரை..

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் அதிகபட்சம் 75 நபர்கள், 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட, அதிகபட்சம் ஓர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் அதிகபட்சம் 100 நபர்கள், 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட்டவர்களுக்கு அதிகபட்சம் ஓர் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும்.

இணையவழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்

பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 05.05.2023 முதல் 20.05.2023 மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வெற்றி விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்

மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை 95140 00777 என்ற எண்ணிற்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story