"ஜாதி பற்றி பேசுவதை, ஜாதியை தூக்கிப்பிடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்"- கமல்ஹாசன் பேட்டி
"ஜாதி பற்றி பேசுவதை, ஜாதியை தூக்கிப்பிடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனது 68வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் 68 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.
பிறந்தநாள் அன்று கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி அலுவலகமும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள் நீதி மைய கட்சியினர் பொதுமக்களுக்கு தென்னை கன்று வழங்கி சிறப்பித்தனர்.
பின்னர் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:-
பிறந்தநாளன்று இங்கே வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் நன்றி. 68 வது பிறந்தநாளில் என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கொளரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் கவுரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன். பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையை கொண்டாட வேண்டும். என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்யும் மேடை அமைத்துக் கொடுக்கிறேன் அவ்வளவு தான்.
சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை அரசு தான் முன்வந்து சீர் செய்ய வேண்டும் என கிடையாது. நாமே அதை முன்வந்து சீர் செய்தாலும் அவை நற்பணி தான்.
அமெரிக்கா முதல் சின்ன குட்கிராமங்களில் கூட நற்பணிகளை மைய தோழர்கள் செய்து வருகிறார்கள். இது வரை 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். நாட்டிற்கு கழிப்பறையும் முக்கியம் தான், இடுகாடும் முக்கியம் தான்,மருத்துவமனையும் முக்கியம் தான் என்றார்.
40 ஆண்டுகளாக என் ரசிகர்கள் செய்யும் நற்பணியை அடுத்த கட்ட பயணத்திற்கு என் கட்சித் தோழர்களை தயார் செய்து வைத்திருக்கிறேன். பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் தோழர்கள் நல்ல முறையில் கொண்டாடி வருகிறார்கள்.
உங்களை என்னால் திருத்த முடியும். ஆனால், ஆளுநரையோ, மத்திய அரசையோ திருத்த வேண்டும் என்றால் அதற்கு நாளாகும் என்றார்.