ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக உதவியாளருக்கு சிறை
திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், வாடகை கார் வைத்து தொழில் செய்தார். அதில் போதிய வருமானம் இல்லாததால், காரை விற்றுவிட்டு நிதிநிறுவனம் நடத்த முடிவு செய்தார். இதற்காக உரிமம் பெறுவதற்கு திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அங்கு பணியில் இருந்த உதவியாளர் கணேசன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுபற்றி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராஜா புகார் செய்தார். இதையடுத்து ராஜாவிடம் ரூ.5 ஆயிரத்தை உதவியாளர் கணேசன் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு மோகனா நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கணேசனுக்கு லட்சம் கேட்ட குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.