போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த தாலுகா அலுவலக காவலாளி கைது


போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த தாலுகா அலுவலக காவலாளி கைது
x

பேரணாம்பட்டு அருகே பயனாளிகளுக்கு அரசு வழங்கிய வீட்டுமனைகளை, போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக தாலுகா அலுவலக காவலாளி கைது செய்யப்பட்டார். அவரை பணிநீக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

போலி ஆவணங்கள் மூலம் விற்பனை

பேரணாம்பட்டு ஒன்றியம் கொண்டம் பல்லி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வருவாய்த்துறை சார்பில் கடந்த 2010-ம் ஆண்டில் 110 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் தற்காலிக இரவு காவலாளியாக பணிபுரிந்து வரும் கொண்டம் பல்லி கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளை போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொண்டம் பல்லி கிராமத்தில் ஆடிமாத மாரியம்மன் திருவிழா நடந்த போது தாலுகா அலுவலக காவலாளி சென்று கோவில் அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி தகராறில் ஈடுப்பட்டு, அங்கிருந்த சூலத்தை பிடுங்கி ரகளையில் ஈடுப்பட்டுள்ளார்.

காவலாளி கைது

இதனை தட்டிக்கேட்ட செவ்வந்தி (44) என்பவரை சேலையை பிடித்து இழுத்து தாக்கி, பெண்கள், பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப் பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தார்.

இதனையடுத்து கொண்டம் பல்லி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு காவலாளி புருஷோத்தமனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பயனாளிகளுக்கு அரசு வழங்கிய வீட்டு மனையை அளவீடு செய்து வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்களிடம் தாசில்தார் நெடுமாறன், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story