மகளிர் சுய உதவிக்குழுக்களின் புளி மதிப்பு கூட்டு நிலையம்
அணைக்கட்டு ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் புளிமதிப்புக்கூட்டு நிலையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மதிப்புக்கூட்டு நிலையம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கீழ்கொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டையான் கொட்டாய் கிராமத்தில் பழங்குடியினர் மகளிர் மேம்பாட்டிற்கான வந்தன் விகாஸ் கேந்திரா திட்டத்தின் கீழ் புளி மதிப்பு கூட்டு நிலைய தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் வரவேற்று பேசினார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி புளி மதிப்பு கூட்டு நிலையத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மகளிர் குழுக்களுக்கு பயிற்சி
பழங்குடியினர் மகளிர் மேம்பாட்டுக்கான வந்தன் விகாஸ் கேந்திரா என்ற திட்டத்தின் கீழ் 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணைக்கட்டு தாலுகாவில் உள்ள பீஞ்ச மந்தை, தண்டையான் கொட்டாய், தொங்கு மலை உள்ளடங்கிய பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 24 மகளிர் குழுக்களில் உள்ள 300 மகளிருக்கு சிறுவன உற்பத்தி பொருட்களுக்கான பயிற்சிகள் கடந்த 26.2.2023 அன்று நிறைவு பெற்றது.
சிறுவன உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என்ற திட்டத்தின் கீழ் புளி, சாமை, கடுக்காய் மற்றும் தேன் ஆகியவற்றுக்கான மதிப்பு கூட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மதிப்பு கூட்டு எந்திரங்கள் வாங்குவதற்காக மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் ரூ.11 லட்சத்து 58 ஆயிரத்து 552 வழங்கப்பட்டது. தண்டையான்கொட்டாய் பகுதியில் பழங்குடியினர் விவசாயம் செய்யும் வகையில் 12 நபர்களுக்கு வன உரிமைச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
வருமானம் பெருகும்
தற்போது புளி மதிப்பு கூட்டு எந்திரம் ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி நிறைவு பெற்ற பழங்குடியினர் மகளிர் சுயமாக வருமானம் ஈட்டி பயனடையும் வகையில் அணைக்கட்டு தாலுகா தண்டாயான் கொட்டாய் கிராமத்தில் புளி மதிப்பு கூட்டு நிலையம் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்கள் மூலமாக ஒரு வருடத்திற்கு 50 அல்லது 60 டன் புளியை வியாபாரிகள் கிலோ ரூ.30 அல்லது ரூ.40 என வாங்கி செல்கின்றனர். சுய உதவி குழுக்கள் மூலமாக புளியிலிருந்து கொட்டையை பிரித்து பேக்கிங் செய்து மதிப்பு கூட்டி விற்றால் கிலோ ரூ.100 அல்லது ரூ.120 என்ற விலைக்கு விற்கப்படும். ஆகவே இடைத்தரகர்களுக்கு போகக்கூடிய பங்கை சுய உதவி குழுக்களின் சார்பில் மதிப்பு கூட்டி விற்பதன் மூலம் வருமானம் பெருகுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பீஞ்ச மந்தை, தண்டையான் கொட்டாய், தொங்கமலை ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடியின மகளிரால் உற்பத்தி செய்யப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட சிறுவன உற்பத்தி பொருட்களை கலெக்டர் பார்வையிட்டார். இதனையடுத்து ஆசனம்பட்டு பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் மற்றும் கருங்காலி, தேவி செட்டி குப்பம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.