திருச்செந்தூரில் புதன்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி
திருச்செந்தூரில் புதன்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி நடக்கிறது.
திருச்செந்தூரில் இன்று (புதன்கிழமை) கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ் கனவு
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் மாபெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகளை மாவட்டம் தோறும் நடத்துவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு பெருமிதச்செல்வன் மற்றும் பெருமிதச்செல்வி ஆகிய விருதுகளும், சொற்பொழிவுக்கு பிறகு கேள்வி எழுப்பும் மாணவ, மாணவிகளுக்கு கேள்வி நாயகன், கேள்வி நாயகி விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே இரண்டு கட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன.
புதன்கிழமை
தற்போது 3-வது கட்டமாக திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் 7 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ. பாலச்சந்திரன், "இணைய தலைமுறையும் இடஒதுக்கீடும்" என்ற தலைப்பில் ஊடகவியலாளரும் உரையாற்றுகின்றனர். மேலும் அரசின் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கும் வகையில் புத்தக கண்காட்சி, அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.