நெல்லை அறிவியல் பூங்காவில் தமிழுக்கு இடமில்லை; தமிழ் ஆர்வலர்கள் வேதனை
நெல்லை அறிவியல் பூங்காவில் தமிழுக்கு இடமில்லை என தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' கோஷம் ஓங்கி ஒலிக்கும் வேளையில் நெல்லை அறிவியல் பூங்காவில் தமிழுக்கு இடம் இல்லை என்ற நிலை பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.
அனைத்தும் ஆங்கிலமயம்
நெல்லை மாநகரில் 'ஸ்மார்ட் சிட்டி' என்ற சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக நெல்லை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. அங்கு அறிவியல் பூங்கா அமைத்து, பொதுமக்கள் சுற்றி பார்க்க வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், அந்த பூங்காவின் பெயர் மற்றும் வழிகாட்டு பலகைகள், அறிவியல் மாதிரிகளின் பெயர் உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலத்தில் இடம்பெற்று உள்ளது. பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது. அதற்கான நுழைவு சீட்டும் ஆங்கிலத்திலேயே வழங்கப்படுகிறது. இவ்வாறு அனைத்தும் ஆங்கிலமயமாக உள்ள அறிவியல் பூங்காவில் தமிழுக்கு இடமில்லை என்ற நிலை தமிழ் ஆர்வலர்களையும், பொதுமக்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி அனைத்தையும் தமிழில் இடம்பெற செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தவறான நடைமுறை
இதுகுறித்து தமிழ் ஆர்வலர் வியனரசு கூறுகையில், 'மொழிப்போர் தியாகிகளின் உயிர் தியாகத்தால் மலர்ந்ததுதான் திராவிட ஆட்சி. தமிழ் ஆட்சி மொழி சட்டம் மற்றும் அரசாணைகள்படி கடை, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பூங்காக்களில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும். ஆனால், நெல்லை புதிய பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் புறக்கணிக்கப்பட்டு, முற்றிலும் ஆங்கிலமயமாக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் தவறான நடைமுறை ஆகும்.
தமிழ் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டு, தமிழர்களிடம் மட்டுமே நுழைவு கட்டணம் வாங்கி உள்ளே அனுப்பப்படும் அறிவியல் பூங்காவில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க வேண்டும், விளக்க குறிப்புகள் எழுத வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் இந்த ஆண்டில் மட்டும் 4 முறை மனு கொடுத்து உள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பாக போராட்ட அறிவிப்பை வெளியிட்டோம். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒரு மாத காலத்துக்குள் தமிழுக்கு மாற்றி விடுவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை மாற்றவில்லை. விரைவில் மாற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம்' என்றார்.
சிவந்திபட்டியை சேர்ந்த சேரன்துரை கூறும்போது, 'நான் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வரும்போது இந்த பூங்காவுக்குள் சென்று பார்ப்பேன். இங்கு அறிவியல் தொடர்பாக பல்வேறு நல்ல தகவல்களை கொடுத்து உள்ளனர். ஆனால், அவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, அவற்றை தமிழிலும் மொழி பெயர்த்து எழுத வேண்டும்' என்றார்.