தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழா
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, மண்டலக்கலை பண்பாட்டு மையம் சார்பில் தமிழிசை விழா மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 26-வது ஆண்டு விழா ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு மண்டலக்கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் முன்னிலை வகித்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ரசிக ரஞ்ஜன சபா செயலாளர் சேகர், கலை பண்பாட்டுத்துறை முன்னாள் இணை இயக்குனர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதனை தொடர்ந்து பத்மஸ்ரீ ஏ.கே.சி. நடராஜன் கிளாரிநெட் இசை நிகழ்ச்சியும், மயிலாடுதுறை சிவக்குமாரின் தேவாரப் பன்னிசை நிகழ்ச்சியும், ஏ.எஸ்.முரளியின் தமிழிசை நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீன லோச்சனி வரவேற்றார். முடிவில் சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் பெரியண்ணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.