தமிழக முதல்-அமைச்சர் நாளை டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்


தமிழக முதல்-அமைச்சர் நாளை டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
x

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க் கிழமை) டெல்லி செல்கிறார். அப்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ள அவர், பிரதமர் மோடியையும் சந்தித்து பேசுகிறார்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் (ஜூலை) 28-ந் தேதி முதல் கடந்த 9-ந் தேதி வரை நடைபெற்றது.

பிரதமருக்கு நன்றி

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையும் அனைவரையும் கவர்ந்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

பதிலுக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகளாகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இதுபோன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மறுநாள் (புதன்கிழமை) காலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளை தெரிவிக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்ததற்கும், இந்த போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்கும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார். அன்று இரவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.


Next Story