தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம்


தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம்
x

தமிழகத்தில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மதுரை மாநகராட்சி பொன்விழா நுழைவு வாயில், பெருங்குடியில் அம்பேத்கர் சிலையையும் திறந்து வைக்கிறார்.

மதுரை

மதுரை,

தமிழகத்தில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மதுரை மாநகராட்சி பொன்விழா நுழைவு வாயில், பெருங்குடியில் அம்பேத்கர் சிலையையும் திறந்து வைக்கிறார்.

முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். நேற்று காலை தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வந்தார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் காரில் புறப்பட்டு அவர் நேற்று இரவு மதுரைக்கு வந்தார். முன்னதாக மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் தே.கல்லுப்பட்டி பகுதியில் அமைச்சர் பி.மூர்த்தி, எம்.எல்.ஏ. தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் வரவேற்பு அளித்தனர்.

தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம்

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று இரவு தங்கினார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள, மதுரை மாநகராட்சி பொன்விழா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாநகராட்சி அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

பின்னர் காரில் புறப்பட்டு தல்லாகுளம், கோரிப்பாளையம், ரிங்ரோடு வழியாக பெருங்குடி செல்கிறார். அங்கு மதுரை விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். அதை தொடர்ந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

முதல்-அமைச்சர் வருகையையொட்டி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story