தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலம்


தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலம்
x

தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. புகைப்பட கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை

விழிப்புணர்வு ஊர்வலம்

பேரறிஞர் அண்ணா கடந்த 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் சட்டமன்றத்தில் "மெட்ராஸ் மாகாணம்" என்பதற்கு பதிலாக "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனடிப்படையில் ஜூலை 18-ம் நாளினை, தமிழ்நாடு நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டையில் நேற்று தமிழ்நாடு நாள் விழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலத்தை கலெக்டர் மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அரசு மகளிர் கல்லூரி வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

புகைப்பட கண்காட்சி

இதனை தொடர்ந்து தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் அரிய புகைப்படங்கள் பல வைக்கப்பட்டுள்ளன.

இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

23-ந்தேதி வரை...

இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி

ஆலங்குடி அருகே வாராப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படம் மற்றும் பொன்மொழிகள் அடங்கிய பதாகையை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் சட்டையாக அணிந்து, சட்டப்பேரவையில் அண்ணாவால் ஜூலை 18-ந்தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானம் பற்றியும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு பற்றியும் எடுத்துரைத்தார். மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் விழிப்புணர்வு பதாகைகளை அணிந்திருந்தனர். தொடர்ந்து தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story