தமிழக விவசாயிகளிடம் வாங்கக்கோரி வழக்கு: பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் என்பது கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது- மதுரை ஐகோர்ட்டில், அரசு தகவல்


தமிழக விவசாயிகளிடம் வாங்கக்கோரி வழக்கு: பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் என்பது கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது- மதுரை ஐகோர்ட்டில், அரசு தகவல்
x

பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் என்பது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் என்பது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2.20 கோடி ரேஷன்கார்டுகள்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்ட தகுந்தது.

விவசாயிகள் பலன் அடைவர்

இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டு உள்ளன. கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடைவதில்லை.

இதற்கு மாற்றாக, தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலன் அடைவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தும் பலன் இல்லை.

எனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய, பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கொள்கை முடிவு

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நடவடிக்கையானது, அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. முன்கூட்டியே மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.

இதையடுத்து அரசு தரப்பு தகவல்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story