நீலகிரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசின் விருது


நீலகிரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசின் விருது
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், குந்தாவில் உள்ள 3 அரசு பள்ளிகள் கிடைத்துள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், குந்தாவில் உள்ள 3 அரசு பள்ளிகள் கிடைத்துள்ளது.

சிறந்த பள்ளிகள் தேர்வு

2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளின் பட்டியலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி கேரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குன்னூர் காந்திபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் குந்தா அலுவலர் முகாம், அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு கிடைத்துள்ளது.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

சிறந்த பள்ளிகள் பல்வேறு தரக்குறியீடுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, பள்ளியில் குழந்தைகளின் கல்வி இணைச்செயல்பாடுகள் வளர்ப்பதில் முக்கியத்துவம் தருதல், பள்ளியில் குழந்தை மைய சூழலுக்கு முக்கியத்துவம் தருதல், குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்ற் அடைவுத்திறன், பள்ளியில் கற்றல் சிறப்பாக நடைபெறுதல், கழிப்பறை வசதிகள், கற்பித்தலில் குறைந்தபட்சம் 5 புதிய உத்திகளை பயன்படுத்துதல், பள்ளியில் குழந்தைகள் சேர்க்கையை அதிகரிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள், பன்முகத்திறன் வெளிப்படை வாய்ப்பு அளித்தல் ஆகிய முக்கிய அம்சங்கள் தரக்குறியீடுகளாக கொண்டு தேர்வு செய்யப்படுகிறது.அந்த அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்திருக்கிறது.

நாளை பரிசு வழங்கப்படுகிறது

சிறந்த பள்ளிகளுக்கு பரிசு மற்றும் விருது வழங்கும் விழா நாளை (சனிக்கிழமை) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஒருவர் சென்னை செல்ல உள்ளனர்.

-------------------------

(பாக்ஸ்) கேரடாமட்டம் அரசு பள்ளியின் வளர்ச்சி

கோத்தகிரி கேரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக மீனா பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த பணத்தில் ரூ.4 லட்சம் செலவு செய்து, பள்ளியின் கட்டமைப்புக்களை மேம்படுத்தி, கட்டிடம், வகுப்பறைகளில் குழந்தைகள் கவரும் வகையில் வர்ணங்கள் பூசி பொலிவுப்படுத்தினார். மேலும் ரூ.1 லட்சத்தில் மாணவிகளுக்கு நவீன கழிப்பறையையும் கட்டியுள்ளார்.

மாணவர்களின் வசதிக்காக வகுப்பறை ஒன்றை நூலகமாக மாற்றியுள்ளார். இதுதவிர சக ஆசிரியைகள் உதவியுடன் மாணவ-மாணவிகளுக்கு தேக்வோண்டோ, தற்காப்பு கலை, பரதநாட்டியம், யோகா உள்ளிட்டவற்றை கற்பித்து வருகிறார். இடைநின்ற மாணவர்கள், வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை கணக்கெடுத்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக தற்போது கேரடாமட்டம் அரசு பள்ளியில் 102 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையான மீனாவிற்கு இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story