சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது என கூடலூரில் அனைத்து கட்சியினர் தெரிவித்தனர்.
கூடலூர்,
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது என கூடலூரில் அனைத்து கட்சியினர் தெரிவித்தனர்.
அறிக்கை தாக்கல்
நாடு முழுவதும் தேசிய வன உயிரின காப்பகங்களின் எல்லையில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர் திறன் மண்டலமாக உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து 3 மாதங்களில் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே கூடலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்று தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கூடலூரில் கூறினர். இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் வாசு, வக்கீல் கோஷி பேபி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திட்ட வடிவம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூடலூரின் மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது. உச்சநீதிமன்றம் அறிவித்தது ஒரு திட்ட வடிவம் தான். இது இறுதி தீர்ப்பு அல்ல. தமிழக அரசு நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் உரிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 49 மாத கால அவகாசம் கோரப்பட்டு உள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அறிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது. மேலும் கூடலூர் பகுதியில் வனம் சார்ந்து வாழும் ஆதிவாசிகள், பிற மக்கள், தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு இத்திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சருக்கு பாராட்டு
கூடலூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ், அம்சா, அப்துல் ரகுமான், சபி (காங்கிரஸ்), முகமதுகனி(இ.கம்யூனிஸ்டு), சாஜி(முஸ்லிம் லீக்), புவனேஸ்வரன்(விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் உடனிருந்தனர்.