தமிழக அரசு பள்ளிகளில் உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக அரசு பள்ளிகளில் உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13-ந்தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அரசு பள்ளிகளில் இதை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 11 பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார்கள். 24 பள்ளிகளில் தலா இருவர் மட்டுமே பயில்கின்றனர். 41 பள்ளிகளில் தலா மூவரும், 50 பள்ளிகளில் தலா 4 பேரும் மட்டுமே பயில்கின்றனர். மொத்தமாக 669 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்றுவரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.
அதற்காக மாணவர் சேர்க்கையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் ஜூன் 13-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறந்தபிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14-ந்தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும் குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்றபிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பான அபத்தச் செயலாகும். இது அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக குறைப்பதற்கே வழிவகுக்கும்.
எனவே, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.