தக்காளி உள்பட காய்கறிகளை தமிழக அரசு மலிவு விலையில் விற்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தக்காளி உள்பட காய்கறிகளை தமிழக அரசு மலிவு விலையில் விற்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

தக்காளி உள்பட காய்கறிகளை தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்து மலிவு விலையில் விற்கவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 மற்றும் ரூ.120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்து குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ ரூ.100-ஐ எட்டியுள்ளது. பல ஏழை குடும்பங்களில் ஒரு நாள் உணவுக்கான தொகையை, காய்கறிகள் வாங்குவதற்காகவே செலவிடவேண்டியிருக்கிறது. வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தவிர்த்துவிட்டு சமையல் செய்வது என்பதும் சாத்தியமில்லை.

அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 மற்றும் ரூ.68 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பண்ணை பசுமை கடைகள் சென்னையில் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாலும், அக்கடைகளில் வழக்கமாக விற்கப்படுவதைப்போன்று மிகக்குறைந்த அளவிலேயே தக்காளி போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாலும் அது சந்தையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பொதுமக்களின் தேவைகளையும் போக்கவில்லை.

மலிவு விலையில் விற்கவேண்டும்

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தமிழ்நாடு அரசு மொத்தமாக கொள்முதல் செய்து தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடிகளிலும், நியாயவிலைக்கடைகளிலும் மலிவு விலையில் விற்கவேண்டும். தக்காளி, சாம்பார் வெங்காயம் போன்றவற்றின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? என்பதை அரசு ஆராயவேண்டும். திடீர் மழையால் தக்காளி பயிர்கள் சேதமடைந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதை விட முதன்மையான காரணம் கடந்த காலங்களில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பயிரிட்டு, விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள், இனியும் அத்தகைய இழப்பை தாங்கமுடியாது என்ற எண்ணத்தில் வெங்காயம், தக்காளி பயிரிட தயங்கி வேறு பயிர்களுக்கு மாறியதும் ஒரு காரணம் என்பதை அரசு உணரவேண்டும்.

தக்காளி அதிகம் விளையும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகளை நோய் தாக்கி விளைச்சல் குறைந்ததும் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்றி, ஆண்டின் எல்லா காலங்களிலும் சந்தைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் தமிழக அரசு உடனடியாக அமைக்கவேண்டும். அவற்றின் மூலம் வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்யவேண்டும். அத்துடன் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதன கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story