'மாதந்தோறும் மின் கட்டணம் மாற்றி அமைப்பதை தமிழக அரசு ஏற்காது' அமைச்சர் திட்டவட்டம்
மத்திய அரசின் மின்சார திருத்த சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்க மாட்டார். எனவே தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக கூறினார்.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. விளையாட்டு அணியின் நேர்காணல் நிகழ்ச்சி 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. இந்த நேர்காணலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. முன்னிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
மு.க.ஸ்டாலின் ஏற்க மாட்டார்
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
மத்திய அரசு மின்சாரத்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. பெட்ரோல்- டீசல் விலையை போன்று மின்சார கட்டணத்திலும் அடிக்கடி மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.
தனியாரிடம் மின்சார வாரியம் செல்லும் போது தமிழ்நாட்டில் கருணாநிதி கொண்டு வந்த சிறப்பு வாய்ந்த திட்டமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், அதேபோன்று 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி, கைத்தறி மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரம், மானியம் எல்லாம் கேள்விக்குறியாகி விடும் வகையில் மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா அமைந்துள்ளது.
எனவே இந்த மசோதாவை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் ஏற்க மாட்டார். அனுமதிக்கப்மாட்டார். எனவே மாதம் ஒரு முறை மின்சார கட்டணத்தில் மாற்றம் வரும். உயரும் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டாம். மாதாந்திர மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது.
ஆதார் இணைப்பு
2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர்களில் நேற்று (நேற்று முன்தினம்) வரையில் 2 கோடியே 1 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இது சிறப்பு வாய்ந்த முயற்சி ஆகும். மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனமயமாக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக இப்பணிகள் முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் தேர்தல் களத்தில் நின்று கடுமையாக பணியாற்றுவோம்.
அண்ணாமலை மீது விமர்சனம்
விமானத்தில் செல்லும் பயணிகள் எல்லோரும் அவசர கால ஜன்னல் ஓர இருக்கையின் மீது கை வைத்திருப்பார்கள். அந்த கதவு திறக்காது. ஆனால் அவர் கை வைத்த கதவு மட்டும் எப்படி திறந்தது. ஆனால் இதனால் அரை மணி நேரம் மட்டும்தான் விமானம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது என்று பச்சை பொய்யை அவர் (அண்ணாமலை) சொல்லி இருக்கிறார்.
ஏப்ரல் மாதம் 'வாட்ச்' (ரபேல் வாட்ச்) பில்லை தருவேன் என்று சொன்னவர் கையில் 'பில்' இருந்தால் உடனே கொடுத்து விட வேண்டியது தானே, இல்லையென்றால் எனக்கு இந்த 'வாட்ச்' வெகுமதியாக வந்தது, இவர் எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார் என்று ஒத்துக்கொள்ள வேண்டியது தானே, அவர் இந்த பில்லை தயாரிக்க ஏப்ரல் மாதம் வரை ஆகும் போல் என்று நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை பேர் பொறுப்பாளர்களாக உள்ளனர்? அந்த கட்சி நிலைமை எப்படி இருக்கிறது? என்பதை அவரிடம் (அண்ணாமலை) கேட்டு சொல்லுங்கள்.
நோட்டாவுடன் போட்டி போடுகிறவர்களை பெரிதாக காட்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.