தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வேலூர் வருகை


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வேலூர் வருகை
x

216-வது வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிப்பாய் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

வேலூர்

216-வது வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிப்பாய் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

சிப்பாய் புரட்சி நினைவு தினம்

இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10-ந் தேதி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு 216-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணியளவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்கள்.

கவர்னர் வருகை

இதற்காக கவர்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியளவில் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வேலூருக்கு 9.30 மணியளவில் வருகிறார். சிப்பாய் நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் கவர்னர் வேலூர் கோட்டை மைதானத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள், ராணுவவீரர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பேசுகிறார். பின்னர் அவர் வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அருட்காட்சியகம் மற்றும் கோட்டை மதில் சுற்றுச்சுவரின் மீது நடந்து சென்று அகழி மற்றும் கோட்டையின் வெளிப்புற மற்றும் உட்புற பகுதியை பார்வையிடுகிறார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் வைத்து முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அவர் காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடு

கவர்னர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கவர்னர் வருகையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வேலூர் கோட்டை மைதானத்தில் கவர்னர் நிகழ்ச்சி நடைபெறும் விழா மேடை மற்றும் அரங்கில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேலூர் தாசில்தார் செந்தில், பொதுப்பணித்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story