தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க மலர்


தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க மலர்
x

தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க மலரை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வெளியிட்டனர்.

புதுக்கோட்டை

சாதனை விளக்க மலர்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஆணைகளை வழங்கும் விழா, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற தலைப்பில் 2 ஆண்டு சாதனை விளக்க மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனை விளக்க மலரினை வெளியிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

520 பயனாளிகள்

இதில் வேளாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5.44 லட்சம் மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.11.5 லட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5.27 லட்சம் மதிப்பிலும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சம் மதிப்பிலான மாதாந்திர நிதியுதவி ஆக மொத்தம் 520 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சாதனை விளக்க மலரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் இடம்பெற்றிருந்தன. விழாவில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், ``மக்களின் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்திவரும் இத்தகைய மக்கள்நலத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

பெண்களுக்கான நலத்திட்டங்கள்

இதேபோல அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ``தமிழக அரசின் 2 ஆண்டு கால ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் அதிகமாகும். இன்னும் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது'' என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story