தமிழக அரசு புதிய உத்தரவு:இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும்அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கருத்து


தமிழக அரசு புதிய உத்தரவு:இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும்அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கருத்து
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் மட்டுமே இனி ஒப்பந்தப்புள்ளி கோர முடியும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தேனி

குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கான செலவு விவரங்களை, ஒருவர் ஓர் அமைப்புக்கு தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணமே ஒப்பந்தப் புள்ளியாகும்.

ஒப்பந்தப்புள்ளி பெட்டி

பொதுவாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத் துறை, வீட்டு வசதித் துறை, குடிசை மாற்றுவாரியம், விவசாய பொறியியல் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புதிய கட்டுமானப்பணிகள், பழுதுபார்ப்பு உள்ளிட்ட வேலைகளைச் செய்வதற்கு அந்தந்தத் துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.

இதில் கலந்துகொண்டு பணிகளை செய்ய விரும்பும் ஒப்பந்ததாரர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளில் பணிகளை நிறைவேற்றி தருவதற்கான தொகையைக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வார்கள்.

ஆணைக் கடிதம்

குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒப்பந்தப்புள்ளி பெட்டியை அதிகாரிகள் திறந்து, அதில் குறைந்த தொகை பதிவு செய்துள்ள தரமான ஒப்பந்ததாரரை தேர்வு செய்து அவருக்கு பணிகளை நிறைவேற்றி தருவதற்கான ஆணைக்கடிதம் வழங்குவார்கள். இதனை பெற்ற ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வேலையை முடித்துத் தருவார்கள்.

ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் விண்ணப்பங்களை போடமுடியாமல் சில இடங்களில் ஒப்பந்ததாரர்களிடையே வாக்குவாதமும், சண்டை சச்சரவுகளும் நடப்பது வழக்கம். இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது.

ஒப்பந்தப்புள்ளிக்குஆன்-லைன் முறை

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்து, அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிக்கும் ஆன்லைன் முறையை கடந்த 1-ந் தேதியில் இருந்து கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதற்கு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் இனி http://tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:-

வரவேற்கத்தக்கது

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறையின், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு) ஏமராஜ் கூறும் போது, 'ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளி கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான். இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்பார்கள். இதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதுடன், ஒளிவு மறைவற்ற நிர்வாகமும் இருக்கும். இது அரசுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் நல்லதுதான்.

அதிகாரிகளுக்கு அழுத்தம் தருவதும் இருக்காது. ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளி மூலம் எந்த பிரச்சினையும் ஏற்படாததுடன், வேலை செய்ய விரும்பும் அனைத்து ஒப்பந்ததாரர்களும் இதில் கலந்து கொள்ள முடியும். பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் கொண்டுவர எளிதாக இருக்கும். அரசின் அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்' என்றார்.

முறைகேடு

கம்பத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் அப்துல்சமது கூறும்போது, 'ஒப்பந்ததாரர்களால் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்தல், ஒப்பந்தப்புள்ளிகள் திறத்தல், தேர்வு பெற்றவர்களுக்கு ஆணைக் கடிதம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்பது வரவேற்கத்தக்கது. இதனால், அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி விவரங்களை அறிய முடியும்.

ஒப்பந்தப்புள்ளி திறப்பு இணையவழியில் ஒரே நேரத்தில் திறக்கப்படும். பங்கேற்கும் அனைத்து ஒப்பந்ததாரர்களும் இதை பார்வையிடலாம். இந்த ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடந்தால் அனைத்து தரப்பினரும் வரவேற்பார்கள்' என்றார்.

நிராகரிக்க வாய்ப்பு

ஊத்துப்பட்டியை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் தவச்செல்வம் கூறும்போது, 'ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி முறைகேடுகளுக்கு வழி வகுக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால், தாக்கல் செய்யும் ஆவணங்களில் சரியாக இல்லை, தெளிவாக இல்லை என்று கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இணையதள சேவை குறைபாடு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படும். ஆன்லைன் மூலம் என்பதால் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். இதனால் பணிகளுக்கு போட்டி அதிகரிக்கும். குறைவான தொகைக்கு பணிகளை செய்ய போட்டி உருவாகலாம். அவ்வாறு தொகையை குறைக்கும் போது பணிகள் தரம் குறையவும் வாய்ப்புள்ளது.

சிறு ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 10 ஒப்பந்ததாரர்கள் இருக்கிறார்கள் என்றால் அனைவரும் பயனடையும் வகையில் பணிகளை பிரித்துத் தரவேண்டும். தற்போது பணி செய்து கொண்டிருப்பவர்கள் புயல், மழை, வெயில் வந்துவிட்டால் காணாமல் போய்விடுவார்கள். அப்போதுதான் அதிகாரிகளும் எங்களை போன்றவர்களைத் தேடி வருவார்கள். எனவே ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி முறையில் முறைகேடுகளும் நடக்கவாய்ப்பு உள்ளது. எனவே இவற்றை நீக்கி தரமான முறையில் செயல்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்' என்றார்.

வெளிப்படைத்தன்மை

கூடலூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் முருகன் கூறும்போது, '22 ஆண்டுகளாக அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து நடத்தி வருகிறேன். ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோர முடியும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. முன்பெல்லாம் ஒப்பந்தப்புள்ளியை குறிப்பிட்ட சிலர் தான் கோர முடியும் என்ற நிலை இருந்தது. சரியான தொகையை பதிவு செய்யும் தரமான ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் கிடைத்தால் கட்டுமானமும் தரமானதாக இருக்கும்.

அதேநேரம் அதிகாரிகள் தாங்கள் விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான ஆணை கடிதம் வழங்க முடியாது. இதில் வெளிப்படைத்தன்மை இருப்பதால் அரசின் திட்டங்கள் திட்டமிட்ட காலத்தில் பொதுமக்களை சென்று சேரும். பணிகளும் தகுதி உள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் கிடைக்கும். யாருக்கும் தனிப்பட்ட முறையில் பாகுபாடு காட்ட முடியாது. இதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்' என்றார்.

ஒப்பந்தப்புள்ளி அனுமதிக்குழு

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'பொதுவாக பணிகளை பொறுத்தவரையில் ரூ.1 கோடி வரை ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு கண்காணிப்பு பொறியாளருக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு முதன்மை பொறியாளரிடம் உள்ளது. அதற்கு மேல் உள்ள தொகைக்கு ஒப்பதல் அளிப்பதற்கு என்று 'ஒப்பந்தப்புள்ளி அனுமதிக்குழு' என்ற ஒரு குழு உள்ளது. அதில் 3 முதன்மை பொறியாளர்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இடம் பெற்றிருப்பார். இவர்கள் ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி அளிப்பார்கள். ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி கோருபவர்கள் தகுதி இல்லை என்றால் உடனடியாக தகுதி நீக்கம் செய்துவிட முடியும். அதேபோல் போலியான ஆவணங்கள் பதிவேற்றம் செய்தாலும் உடனடியாக தெரிந்துவிடும். தற்போது ஒப்பந்தப்புள்ளி என்றாலே 2 பேர் மட்டுமே போடுகின்றனர். அதில் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி என்றால் போட்டியும் அதிகமாக இருக்கும். இந்த அறிவிப்பால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை' என்றனர்.


Related Tags :
Next Story