தொழிலாளர் விரோத சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்-வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை


தொழிலாளர் விரோத சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்-வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை
x

தொழிலாளர் விரோத சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பது உலகத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையாகும். அந்த உரிமையை பறிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் தொழிலாளர் விரோத மசோதாவை அரசு நிறைவேற்றி உள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மசோதாவை தொழிலாளி வர்க்கம் ஒருபோதும் ஏற்காது. இதனை முறியடிக்கும் வரை எதிர்த்துப் போராடும் என்பது உறுதி.

150 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் ஒரு திருத்தம் மூலமாகத் தமிழ்நாடு அரசாங்கம் பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றியபோது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், வேலை நேரம் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்குப் புறம்பாகவும் இந்த சட்டத்திருத்தம் உள்ளது. தொழிலாளர்களுக்கு முற்றிலும் பாதகமான இந்த சட்டத் திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story