'பா.ஜ.க.வை பழிவாங்கும் வகையில் செயல்படுகிறது தமிழக அரசு': மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் குற்றச்சாட்டு
பா.ஜ.க.வை பழிவாங்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் குற்றம்சாட்டினார்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், பழனியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மகுடீஸ்வரன், ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் அடிவாரம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மலர்தூவி அவர் மரியாதை செய்தார்.
இதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியதன் மூலம் மின்கட்டண ரசீதை தொட்டாலே ஷாக் அடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அரசின் தோல்விக்கு இது உதாரணம். மாநில அரசு திவாலாகி கொண்டிருக்கிறது.
மோசமான நிதி நிர்வாகத்தால் தமிழக அரசின் கடன் ரூ.5½ லட்சம் கோடியில் இருந்து ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குற்றங்கள் அதிகமாகி சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. மேலும் பா.ஜ.க.வை பழிவாங்கும் வகையிலேயே தமிழக அரசு தற்போது செயல்படுகிறது. இது ஜனநாயக குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. ஊழல் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது. எனவே அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார்.