'வந்தாரை வாழ வைக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது' கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்


வந்தாரை வாழ வைக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
x

தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், வந்தாரை வாழவைக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருவதாகவும் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை,

1956-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மாநில சீரமைப்பு சட்டத்தினால் மொழி வாரியான மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திரா, தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ்நாடு என மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

ஆனால் குஜராத்தி, மராட்டியம் பேசும் மக்களுக்கு ஒரே மாநிலமாக மும்பை என ஒதுக்கியதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து நடந்த போராட்டங்களால் 1960-ம் ஆண்டு மே 1-ந் தேதி மராட்டியம் பேசும் மக்களுக்கு மராட்டிய மாநிலம் என்றும், குஜராத்தி பேசும் மக்களுக்காக குஜராத் மாநிலம் என்றும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது.

இந்த 2 மாநிலங்கள் உருவான நாள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று விழாவாக கொண்டாடப்பட்டது.

சகோதரத்துவத்துடன் பழகுகின்றனர்

கவர்னரின் செயலாளர் (பொறுப்பு) மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.

கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

தஞ்சை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த தனுஸ்ரீ, மூத்த வக்கீல் ஹரிதாஸ், பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் உள்ளிட்ட தமிழகத்தில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் குஜராத், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பலர் பேசினர்.

அப்போது அவர்கள், பல தலைமுறைகளுக்கு முன்பாக தமிழகம் வந்தது குறித்தும், மொழிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் சகோதரத்துவத்துடன் பழகுவதாகவும், தங்கள் சொந்த மாநிலங்களில் வசிப்பது போன்ற உணர்வோடு தமிழகத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

பாகுபாடு காட்டுவதில்லை

மேலும், மொழி வாரியாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஒற்றுமையுடன் இருந்து வருவதாகவும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களை பிற மாநிலத்தவர் என்ற பாகுபாடு காட்டாமல் தங்களை தமிழர்களாகவே ஏற்றுக்கொண்டு தமிழக மக்கள் நட்பு பாராட்டுவதாகவும் கூறினர்.

பாதுகாப்பான மாநிலம்

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதற்கு உதாரணமாக தமிழகம் பல மாநில மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மக்கள், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக தங்கள் பெண் குழந்தைகளை படிப்பதற்காகவும், வேலைக்காகவும் எந்தவித தயக்கமும் இன்றி தமிழகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்தியர்கள் என்ற உணர்வு

சத்திரபதி சிவாஜி தமிழ்நாட்டில் படையெடுத்தார் என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே சத்திரபதி சிவாஜி, அன்னிய படையெடுப்பில் இருந்து இந்தியாவின் ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் காப்பாற்றவே படையெடுத்தார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மராட்டிய மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கும், தமிழகத்தில் ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு வருபவர்களுக்கும் தங்கும் வசதி, உணவு வசதி, வைத்தியசாலை உள்ளிட்ட வசதிகளை மன்னர்கள் செய்து கொடுத்தனர்.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story