இந்திய அளவில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3-வது இடம் பிடித்த தமிழகம்


இந்திய அளவில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3-வது இடம் பிடித்த தமிழகம்
x

அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3-வது இடம் பிடித்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கினார்.

சென்னை,

பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகள் அங்கீகரிப்பு ஆகியவற்றுக்காக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையால், "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள்" என்ற அடிப்படையில், மாநிலம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான விருதுகளும், சிறப்புப்பிரிவு விருதுகளும், பயனாளிகளுக்கான விருதுகள் என 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அவற்றில், சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3-வது இடத்தையும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சி 3-வது இடத்தையும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சி 5-வது இடத்தையும் பிடித்து விருதுகள் பெற்றுள்ளன.

பிரதமர் வழங்கினார்

மேலும், மாநிலங்களுக்கு இடையிலான சிறப்பு பிரிவு விருதுகளின் கீழ், திறனுக்கேற்ற வாடகை வீட்டு வசதி குடியிருப்புகள் மாதிரி 2-ன் கீழ், விரைவாக பணிகளை மேற்கொண்டதற்காக சிறப்பு விருதும், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கட்டுமான பணிகளை மேற்கொண்டதற்காக சிறந்த மாநிலங்களுக்கான விருதும் பெற்றுள்ளன.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்த தமிழ்நாட்டிற்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கினார்.

விழாவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ஹித்தேஷ் குமார் மக்வானா, வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்தராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story