பனைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்


பனைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்
x

இந்தியாவிலேயே பனைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இந்தியாவிலேயே பனைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கருத்தரங்கு

குமரி மாவட்ட தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பனை சாகுபடி மற்றும் பனை மதிப்பு கூட்டுதல் பற்றிய மாவட்ட அளவிலான கருத்தரங்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பனை ஒரு பல்லாண்டுப் பயிர். மெதுவாக வளரும் இயல்பைக் கொண்டுள்ள பனைகளில் ஆண் மற்றும் பெண் பாலினம் தனித்தனியே காணப்படுகிறது. கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் மேடுகளில் பனை வளர்வதால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பனை, இந்தியாவை அடைந்த பிறகே பரவலாகப் பேசப்படும் நிலையை அடைந்தது. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரங்களில் குமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னையிலிருந்து பீகார் வரையும் பனைகள் காணப்படுகின்றன.

கற்பக விருட்சம்

இந்தியாவிலேயே பனைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் காணப்படும் 5.19 கோடி பனைகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் சுமார் 713 எக்டர் பரப்பளவில் 7,91,430 பனை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக முன்சிறை, கிள்ளியூர், அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டாரத்தில் பனை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. பண்டைக்காலந்தொட்டு பனைவெல்லம், பதநீர், நுங்கு, பனம்பழச்சாறு, கிழங்கு, குருந்தோலைகள் போன்றவை விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன.

பல்வேறு பயன்களை அள்ளித் தரும் பனை "கற்பக விருட்சம்" என வழங்கப்படுகிறது. மலர்கள், பழங்கள், விதைகள் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவையாக உள்ளன. பனம்பாளை மற்றும் வேர்களும் மருத்துவக் குணங்களைப் பெற்றுள்ளன. பாளைகளை எரித்து பெறப்படும் சாம்பல் மண்ணீரல் வீக்கத்தைத் தடுக்க பயன்படுகிறது. தமிழ்நாடு அரசால் பனையை காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பனை மேம்பாட்டு இயக்கம் எனும் திட்டம் அரசால் தொடங்க, அதன் கீழ் பனை விதைகள் வினியோகம், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்குதல், பனைமரம் ஏறுதலுக்கான உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிற்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சி கருத்தரங்கு

பின்னர் கலெக்டர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பனை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பான கையேட்டினை வெளியிட்டு 2 பயனாளிகளுக்கு பனை விதைகளை வழங்கினார். பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்ட பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பனைமரம் ஏறும் உபகரணங்கள், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் உபகரணங்கள், பனை கைவினைப்பொருட்கள் ஆகிய கண்காட்சி அரங்கை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ஆல்பர்ட் ராபின்சன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) முன்னாள் முதல்வர் மற்றும் பேராசிரியர் பொன்னுசாமி, தோட்டக்கலை பேராசிரியர் ரிச்சர்டு கென்னடி, சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனம் செயலாளர் (சிதம்பரம்) குமரி நம்பி, உடன்குடி பனை பொருள் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் (தூத்துக்குடி) சக்திகுமார், தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியம் உதவி இயக்குனர் (பொறுப்பு) எபினேசர், ராஜாக்கமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பைசல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story