தமிழ்நாடு ஓட்டல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை


தமிழ்நாடு ஓட்டல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
x

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு ஓட்டலை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகையில் 'ஓட்டல் தமிழ்நாடு' மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா தலம்

வணிக அடிப்படையில் சுற்றுலாவை மேம்படுத்த 1971-ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 'ஓட்டல் தமிழ்நாடு' என்ற ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது.நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளதால் மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளது.பழனியில் உள்ள முருகன் சிலையை வடிவமைக்க போகருக்கு உதவிய கோரக்க சித்தரின் சமாதியும் நாகை அருகே வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ளது.

சிறப்பு வாய்ந்த நாகை பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இது தவிர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

ஓட்டல் தமிழ்நாடு

மாவட்ட முழுவதும் சுற்றுலா தலங்கள் இருப்பதால் நாகை நகர் பகுதிக்கு வந்து தான் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.நாகை தோணித் துறை ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 'ஓட்டல் தமிழ்நாடு' என்ற பெயரில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இது சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த ஓட்டல் பல ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. விடுதியை சுற்றி புதர் மண்டி கிடக்கிறது. கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, முகம் சுளிக்கும் விதமாக காட்சியளிக்கிறது.

அதிக கட்டணம்

நாகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய நிலை உள்ளது. அதுவே சீசன் காலம் என்றால் தனியார் விடுதி உரிமையாளர்கள் கேட்கும் அதிக கட்டணத்தை கட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே நாகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 'ஓட்டல் தமிழ்நாடு' ஓட்டல் மற்றும் தங்கும் விடுதியை மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகையை சேர்ந்த சந்திரசேகரன்:- ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் நாகை மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், யாத்திரிகர்களும் வந்து செல்கின்றனர்.

கந்தசஷ்டி விழாவின்போது திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ய முருகனுக்கு வேல் கொடுத்த இடமான சிக்கல் சிங்காரவேலர் கோவில் நாகையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கலங்கரை விளக்கம், துறைமுகம் என்று சுற்றுலா பயணிகளை தன் வசம் இழுக்கும் எல்லா சிறப்பு அம்சங்களையும் நாகை பெற்றுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான விடுதிகள் குறைந்த விலையில் கிடைப்பது சிரமமாக உள்ளது.

மூடிக்கிடக்கிறது

நாகையில் இருந்த ஓட்டல் தமிழ்நாடு சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. பல ஆண்டுகளாக இந்த ஓட்டல் மூடி கிடக்கிறது.தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால், மூடி கிடக்கும் ஓட்டல் கட்டிடம் இடிபடும் நிலையில் உள்ளது.

இதற்கு பதிலாக நகரின் முக்கிய இடத்தில் ஓட்டல் தமிழ்நாடு அமைக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

நடவடிக்கை

நாகையை சேர்ந்த அரவிந்த்:- நாகையில் ஓட்டல் தமிழ்நாடு செயல்பட்டபோது சுற்றுலா பயணிகளை தவிர மற்றவ யாருக்கும் அதிகம் தெரியவில்லை. தனியார் ஓட்டல்களை விடக் குறைவான வாடகையில் சாப்பாடு வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி மற்றும் சாதாரண அறைகள், விசாலமான கார் பார்க்கிங் உள்ளிட்டவை அமைந்தும், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இந்த ஓட்டல்கள் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த ஓட்டல் பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மீண்டும் இந்த ஓட்டலைபுதுப்பொலிவுடன் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story