தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது
இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது என்று மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூறினார்.
இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது என்று மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூறினார்.
துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வங்கி கடன் பெறுவது மட்டும் இல்லாமல் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த அரசுத்துறை உதவிகள் மற்றும் தொழில் மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்குவது குறித்து தொழில் நிறுவனங்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட திட்ட விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட, கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசியதாவது:-
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது.
கடன் உதவிகள்
இக்கழகம் புதிய தொழில் முனைவோர்களுக்கு, ஏற்கனவே இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் நிறுவனத்தை விரிவுப்படுத்துவதற்கு, கடன் உதவிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் வழங்குவதும், குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட கால கடன் உதவிகளை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு நீட்டிப்பையும் வழங்கி உதவி வருகிறது.
கடன் வழங்கும் சேவை மட்டும் இல்லாமல் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த அரசு துறைகளில் உதவிகளை எளிதில் பெற்று எவ்வித கால தாமதம் இன்றி தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுப்படுத்திடவும், ஒருங்கிணைந்த அரசு துறைகளில் சேவைகளை விரைவாக பெற தொழில் முனைவோர்களுக்கு மற்ற உதவிகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இக்கழகம் தொழில் முனைவோர்கள் நிறுவனங்களுக்கு தேவையான மொத்த முழு கடன் உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தொழில் நிறுவனங்கள் தரமான உற்பத்தி பொருட்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்து போட்டி சந்தையில் விற்பனை செய்து முன்னேறவும், ஒப்பிட முடியாத அளவில் இந்த உதவிகளை மேற்கொள்கின்றது.
தொழில் நிறுவனங்கள் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சி அடைந்து மென்மேலும் வளர அரசு உங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், கிளை மேலாளர் கவுரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.